Skip to main content

Posts

வேகத்தடை

ஒரு வரலாற்று ஆய்வாளன் போல் நானும் நாம் கதை பேசி நடந்த அந்த நீண்ட தெருவை மீண்டும் கடந்து பார்க்கிறேன் பல பத்தாண்டுகளுக்கு பிறகு. நாம் நடந்து சென்ற காலடி தடங்கள் கால ஓட்டத்தில் கரைந்து போனாலும் என் நினைவில் இன்னும்... நீ என் புத்தகங்களை சுமந்ததும் நான் உன் புன்னகையை சுமந்ததும் அந்த தேநீர் கடை மட்டும் மாறாமல் அப்படியே.  நீண்ட தெருவின் முனை இரண்டாய்  பிரியும் இடம் நாம் தினமும் பிரியும் இடம் மாலையில் கூடும் இடம் அன்பளிப்புகளையும், பார்வைகளையும் பரிமாறி கொண்ட இடமும் அதுவே. இன்று அங்கு புதியதாய் ஒரு வேகதடை நம் நினைவுகளுக்கு கட்டப்பட்ட சிறிய சமாதிபோல். எல்லா வாகனங்களும் ஒரு சில நொடிகள் தாமதித்தே செல்லுகின்றன அஞ்சலி செலுத்துவதுபோல் என் வாகனமும் அப்படித்தான் சென்றது அன்பே.
Recent posts

இடைவெளி

நம் இடையே இடைவெளி சிறிதெனினும் நான் கடக்க முடியா பெரும்தொலைவு என உணருகிறேன் இருளின் கானகத்தில் நுழைகிறேன் கண்ணீரை மறைத்து கொள்ள.

சொல்லலாம் நீ

எல்லோரும் எப்போதும் எந்நேரத்திலும் எப்படியாவது சொல்ல நினைத்திருக்கலாம் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஒரு போருக்கு போவது போல் நீ ஆயுதங்களை திரட்டி சென்றிருக்கலாம்., சரணடைந்திருக்கலாம், சொல்லிவிடுவாரோ சொல்லாமல்விடுவாரோ சொன்னால் என்ன சொல்வது என்று , சொல்லாமல் செல்வதைவிட, நீ சொல்லி செல்லாம். சொன்னவுடன் உனக்கு கிடைக்கலாம், ஒரு பார்வை ஒரு கண்ணீர் ஒரு முத்தம் ஒரு தழுவல் அல்லது ஒரு அறை. அல்லது நீ அச்சத்துடன் காத்திருக்கலாம்

புது மனிதன்

புது இடத்தில் பழைய மனிதர்களிடம் புதிய மனிதனாகவும் , பழைய இடத்தில் புதிய மனிதர்களிடம் பழைய மனிதனாகவும், பழகுவது என்பது புது இடத்தில் புது மனிதர்களிடம் புதிய மனிதனாக பழகுவதை விட சோகமானது!!!

ஆசை

நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது திறக்க முடியா கதவை திறந்து பார்க்க உடைக்க முடியா பூட்டை உடைத்து பார்க்க கடக்க முடியா தொலைவுகளை கடந்து பார்க்க நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது இயங்க மறுக்கும் வாகனத்தை இயக்கி பார்க்க அணிய முடியா ஆடையை அணிந்து பார்க்க பொருத்தமில்லா காலணியை பொருத்தி பார்க்க நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது இழந்த காதலை இழந்த காலத்தை இழந்த செல்வத்தை இழந்த இளமையை இழந்த நட்பை இழந்த உறவை இழந்த நம்பிக்கையை மீட்க நமக்குள் எப்போதும் ஒரு ஆசை இருக்கிறது.

ஒற்றை செருப்பு

நிராகரிக்கப்பட்ட அந்த ஒற்றை செருப்பு ஒற்றைசெருப்புகள் கனத்த சோகங்களின் மௌன சாட்சியாக வானத்தை பார்த்தபடி. ஒற்றை செருப்புகள் ஒவொவொன்றின் பின்னும்  கதை ஒன்று இருக்கலாம் உனக்கு புரியாதபடி. நீ செல்லும் பாதையில் நீ ஏறி செல்லும் மலைகளில் ஆற்றின் கரைகளில் ஊர்வலம் சென்ற பாதைகளில் கலவரத்தின் சுவடுகளில் நீ செல்ல விரும்பாத வீடுகளி்ன் முற்றங்களில் வீழ்த்தப்பட்ட விலங்கை போல் முறிப்பட்ட  கிளையை போல் ஓய்ந்து கிடக்கலாம் ஒரு சோகத்தை ஒரு துயரத்தை ஒரு தனிமையை ஒரு விரக்தியை ஒரு நிராகரிப்பை சுமந்தபடி உன் வீட்டிலும் இருக்கலாம் அது.

அந்த ஒரு வினாடி

பாலை வெளியில் கொட்டி தீர்க்கிறது ஒளியை  நிலவு. குளிர் கெட்டித்து கிடக்கும் இரவு. மனம் கிடந்து தவிக்கிறது உன் துணையின்றி. உன் பெயர்  மணக்கும் இந்த உடல் எரித்த சாம்பலில் முளைத்த புற்களென உன் பாதங்கள் தொட்டு செல்லும் பாதையில் நான். கடும் கோடையின் அனல் காற்றில் மிதந்து வரும் சருகுகள் கொண்டுவரும் என் சாவின் செய்தி உனை சேரும் வேளையில், விழிகளில் திரளும் கண்ணீர் துளிகளை மறைத்துக்கொள்ள உனக்கு ஒரு வினாடி  தனிமை கிடைக்கட்டும்.